×

காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் போலீசார் இல்லாத வாகன தணிக்கை சாவடி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட எல்லை பகுதியான புஞ்சை அரசந் தாங்கல் பகுதியில் உள்ள வாகன தணிக்கை சாவடியில் போலீசார் பணியில் இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் புஞ்சையரசன்தாங்கல் அடுத்த புற்று கோயில் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லை முடிந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லை தொடங்குகிறது. இப்பகுதியில், திருவண்ணாமலை மாவட்டம் தூசி காவல்துறை சார்பில் காவல் தணிக்கை சாவடி அமைக்கப்பட்டு அவ்வப்போது வாகன தணிக்கை நடைபெறும்.

இதேபோன்று புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் பாலாறு மேம்பாலத்தை அடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் சார்பில், வாகன தணிக்கை சாவடி உள்ளது. காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் வாகனங்களை கண்காணிக்கவும், கனிம வள கடத்தலை தடுக்கவும், இந்த சோதனை சாவடியில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் பணியில், ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில், ஊரடங்கு விதிமீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனைச் சாவடி பயன்பட்டது. இந்நிலையில், சமீபகாலமாக, இங்கு போலீசார் பணியில் இருப்பதில்லை. இதனால், இரவு நேரங்களில், கனிமவள கடத்தல் வாகனங்கள், தடையில்லாமல் அருகிலுள்ள மாவட்டத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளது.

மேலும், இதே பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா மொத்த விலையில் அமோகமாக விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளான அப்துல்லாபுரம், அய்யங்கார்குளம், கோளிவாக்கம், தூசி, மாமண்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சரளமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் அவ்வப்போது போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீஸ் வாகன தணிக்கை சாவடி அருகிலேயே சர்வசாதாரணமாக தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை தடையின்றி நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போலீஸ் சோதனைச் சாவடி நிரந்தரமாக செயல்படும் வகையில், சுழற்சி முறையில் போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோருகின்றனர்.

The post காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் போலீசார் இல்லாத வாகன தணிக்கை சாவடி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district border ,Kanchipuram ,Kanchipuram district ,Punjai Arandathangal ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...